×

ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் என்பதால் ஜவ்வாதுமலையில் அதிகளவில் உற்பத்தியாகும் சீத்தாப்பழங்கள்: பாக்ஸ் ரூ.500க்கு வாங்கி செல்லும் வியாபாரிகள்

போளூர்: ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் உள்ளதால் ஜவ்வாது மலையில் அதிகளவில் உற்பத்தியாகும் சீத்தாப்பழத்தை பறிக்க ஆள் இல்லமல் வீணாகி வருகிறது. வியாபாரிகள் பாக்ஸ் ரூ.500க்கு வாங்கி செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் பட்டா நிலங்களில் 7 ஆயிரம் புளியமரங்களும், வனப்பகுதிகளில் 23 ஆயிரம் புளியமரங்கள் என 30 ஆயிரம் புளியமரங்கள் உள்ளன. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1,200 டன் புளி உற்பத்தி செய்யப்படுகிறது. போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதாக கூறி மன்னர்கள் காலத்தில் நடப்பட்ட புளியமரங்களை எல்லாம் வெட்டி சாய்த்துவிட்டதால் நகரப்பகுதிகளில் புளி உற்பத்தி நின்று போய் விட்டது. தமிழகத்திலேயே சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு அடுத்த படியாக திருவண்ணாமலை மாவட்டம் தான் புளி உற்பத்தியில் சாதனை புரிந்து வந்தது. ஆனால் சாலையோர புளியமரங்கள் வெட்டப்பட்டதால் புளியின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. இந்த சரிவை ஈடுகட்டும் வகையில் மாவட்டத்திலேயே ஜவ்வாதுமலையில் தான் புளி உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் புளி அதிக சதைப்பற்றுடன் இருப்பதால் ஜவ்வாதுமலை புளிக்கு மற்ற ஊர்களில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இதேபோல் ஜவ்வாதுமலை வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளாமரங்கள் இயற்கையாக உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் சுவைமிகுந்த விளாம்பழம், சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கொய்யாபழம், மாம்பழம் மற்றும் பலாப்பழம் உற்பத்தியும், அதற்கு அடுத்தபடியாக மேல்பட்டு, கல்லத்தூர், கிளையூர் ேபான்ற பகுதிகளில் வாழைபழம் உற்பத்தியும் கணிசமாக உள்ளது. இவை அனைத்தையும் விட சீத்தாப்பழம் உற்பத்தியில் சக்கைபோடு போடுகிறது. ஜவ்வாதுமலையில் விளை நிலங்கள், சாலையோரங்கள், கிராம பகுதிகள், வனப்பகுதிகள் என எங்கு பார்த்தாலும் சீத்தாப்பழம் செடியில் செழித்து வளர்ந்துள்ளதை காணமுடியும். ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இதன் சீசன் இருக்கும். இந்த பழங்களை அங்குள்ள மலைவாழ் மக்கள் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். காரணம் அது குளிர்ச்சி தன்மை கொண்டதால் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என ஒருவித பயம் இருக்கிறது. எனவே அதனை பறிப்பதற்கு கூட ஆள் இல்லாமல் கேட்பாரற்று செடிகளில் காய்கள் காய்த்து தொங்குவதை காணமுடிகிறது.

சில சமயம் செடிகளில் காய்த்து பின்னர் வீணாக அழுகி போவதும் உண்டு. எனவே வேலூர், போளூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற நகர பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஜவ்வாதுமலைக்கு சென்று சுமார் 80 முதல் 100 சீத்தா பழங்கள் வரை அடங்கிய ஒரு பாக்ஸ் ரூ.500க்கு விலைபேசி வாங்கி அதனை அழகாக அடுக்கி ேகாயம்பேடு மற்றும் பெங்களுரூ போன்ற நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார வசதியும் கிடைக்கிறது.

 

The post ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் என்பதால் ஜவ்வாதுமலையில் அதிகளவில் உற்பத்தியாகும் சீத்தாப்பழங்கள்: பாக்ஸ் ரூ.500க்கு வாங்கி செல்லும் வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Javadumalayas ,Javadu ,Marvadumalai ,
× RELATED ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள அரசு...